குஜராத் சபர்மதி ரெயில் நிலையத்தில் 19 ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம்


குஜராத் சபர்மதி ரெயில் நிலையத்தில் 19 ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம்
x
தினத்தந்தி 5 May 2021 11:30 PM IST (Updated: 5 May 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் உள்ள சபர்மதி ரெயில் நிலையத்தில் 19 ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

காந்திநகர்,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 12,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 12,955 பேர் குணமடைந்திருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பால் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆகியவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ரெயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில் பெட்டிகளில் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் இதுவரை 4,400க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு, அதில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ரெயில் நிலையத்தில், இந்திய ரெயில்வே மற்றும் அகமதாபாத் நகராட்சி இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், 19 ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுக்கு உதவும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story