மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 21 பேர் உயிரிழப்பு - பாஜக தலைவர் தகவல்
மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பின்னர் மேற்குவங்காளத்தில் பாஜகவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. குறிப்பாக, பாஜகவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வன்முறையில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் என்று பாஜக தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில், வன்முறை தொடர்பாக களநிலவரத்தை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சத்தின் குழு இன்று மேற்குவங்காளம் வந்துள்ளது. இந்த குழு வன்முறை நடைபெற்ற இடங்களை நேரில் பார்வையிட உள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் குழுவை மேற்குவங்காள பாஜக தலைவர் திலீக் கோஷ் தலைமையிலான குழு இன்று நேரில் சந்தித்தது. இந்த சந்திப்பின் போது தங்கள் கட்சியினர் மீது திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியவதாகவும், அதற்கான ஆதாரங்களையும் மத்திய உள்துறை அமைச்சக குழுவினர் பாஜக தலைவர்கள் வழங்கினர்.
மத்திய உள்துறை அமைச்சக குழுவுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் (145 தொகுதிகள்) வன்முறை நடைபெற்று வருகிறது. 21 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமப்புறங்களிலும் பார்வையிட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சக குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். எங்கள் அறிக்கையை அவர்களிடம் கொடுத்துள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story