கொரோனா பாதிப்பு: மராட்டியம், டெல்லி, உள்பட 10 மாநிலங்களில் 71.81 சதவீதம் பதிவு
இந்தியாவில் மராட்டியம், டெல்லி, உ.பி. உள்பட 10 மாநிலங்கள் 71.81 சதவீத கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் 3வது நாளாக தொடர்ந்து 4 லட்சம் பேருக்கு கூடுதலான தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் மராட்டியம், டெல்லி, உ.பி. மற்றும் கேரளா உள்பட 10 மாநிலங்கள் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 71.81 சதவீதம் அளவு பாதிப்புகளை கொண்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த பட்டியலில், கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் உள்ளன.
எனினும், டெல்லி, சத்தீஷ்கார், குஜராத், மராட்டியம், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற தகவல் ஆறுதல் அளிக்கிறது.
மராட்டியத்தில் 54,022 பேருக்கு பாதிப்புகளும், 898 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இவற்றில், மும்பை பெருநகரில் 3,039 பேருக்கு பாதிப்புகளும், 71 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 28,076 பேருக்கு பாதிப்புகளும், 372 பேர் உயிரிழந்தும் உள்ளனர். டெல்லியில் 19,832 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. 341 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் 48,781 பேருக்கு பாதிப்புகளும், 592 பேர் உயிரிழந்தும் உள்ளனர். சத்தீஷ்காரில் 13,628 பேருக்கு பாதிப்புகளும், 208 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேற்கு வங்காளத்தில் 19,216 பேருக்கு பாதிப்புகளும், 112 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story