மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே ஆலோசனை


மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே ஆலோசனை
x
தினத்தந்தி 9 May 2021 1:45 AM GMT (Updated: 9 May 2021 1:45 AM GMT)

மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி- முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.

மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி- முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். அப்போது போதியா ஆக்சிஜன் வழங்க பிரதமரிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

சற்று தணிந்த பாதிப்பு

2-வது கொரோனா அலை நாட்டு மக்களை வறுத்தெடுத்து வரும் நிலையில், இந்த பாதிப்பில் மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது. மோசமான பாதிப்பை சந்தித்த மராட்டியத்தில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி இருந்தது. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு திணறியது. எனவே கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கை போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதன் காரணமாக மாநிலத்தில் கொரோனா ஆதிக்கம் சற்று தணிந்து உள்ளது. ஆனாலும் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 54 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டனர். கவலை அளிக்கும் அளவில் 898 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தொலைபேசியில் ஆலோசனை

எனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ஆறுதல் தரும் அளவுக்கு தான் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் கொரோனா நிலவரம் குறித்து பிரதமரிடம் விளக்கமாக எடுத்து கூறினார்.

இதைதொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான உதவியை மத்திய அரசு செய்யும் என்று உத்தவ் தாக்கரேயிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

3-வது அலை

இதேபோல கொரோனா 3-வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ள நிலையில், அதை எதிர்கொள்வது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து மராட்டிய முதல்-மந்திரி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆக்சிஜன் தேவை

பிரதமரிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியபோது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஆக்சிஜனை வழங்கும்படி அழுத்தமாக வலியுறுத்தினார். 2-வது கொரோனா அலையை மராட்டியம் சிறப்பாக எதிர்கொள்வதாக பிரதமர் பாராட்டினார். கொரோனா தொடங்கியதில் இருந்து அதற்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் மராட்டியம் பயன்பெறுவதாக பிரதமரிடம் முதல்-மந்திரி தெரிவித்தார். அதேபோல மாநில அரசின் பல்வேறு யோசனைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதையும் குறிப்பிட்டு, இதற்காக பிரதமருக்கு முதல்-மந்திரி நன்றி தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story