கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு


கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2021 12:14 AM GMT (Updated: 14 May 2021 12:14 AM GMT)

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், இரண்டாவது டோசுக்கும் இடையேயான இடைவெளியை 16 வாரங்களாக நீட்டித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி, 

நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் என 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு தடுப்பூசிகளும் 2 டோஸ் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திய பின்னர் 6 முதல் 8 வார இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

தற்போது இந்த தடுப்பூசியின் முதல் டோஸ்-ஐ செலுத்திக் கொண்ட பின்னர் 12 முதல் 16 வார இடைவெளியில் 2-வது டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று கோவிட் பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

சுகாதார அமைச்சகம் ஏற்பு

இந்த பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையொட்டி வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் கூறி இருப்பதாவது:-

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், 2-வது டோசுக்கும் இடையேயான இடைவெளியை 12 முதல் 16 வாரங்கள் நீட்டிக்கலாம் என்று டாக்டர் என்.கே. அரோரா தலைமையிலான கோவிட் பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது இந்த இடைவெளி 6-8 வாரங்களாக உள்ளது.

நிஜவாழ்க்கை ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிக்குழுவின் பரிந்துரை, 12-ந் தேதி நிதி ஆயோக்கின் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் கூடிய கோவிட் 19-க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு (நெக்வேக்) ஏற்றுக்கொண்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 12-16 வாரங்களுக்கு நீட்டிக்க கோவிட் பணிக்குழு செய்த பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story