முதல்-மந்திரியை மாற்றுவது குறித்து ஆலோசிக்க, கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவு? கர்நாடக அரசியலில் பரபரப்பு


முதல்-மந்திரியை மாற்றுவது குறித்து ஆலோசிக்க, கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவு? கர்நாடக அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 May 2021 3:50 AM GMT (Updated: 27 May 2021 3:50 AM GMT)

முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து ஆலோசிக்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டும்படி எடியூரப்பாவுக்கு, பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் செல்வாக்கு
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரையில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட பெரிய தலைவர்களும் இந்த விதிப்படி ஓரங்கட்டப்பட்டனர்.ஆனால் 75 வயது என்ற எல்லையை கடந்த பிறகும் எடியூரப்பாவை பா.ஜனதா மேலிடத்தால் கட்சியில் இருந்து ஓரங்கட்ட முடியவில்லை. அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு, லிங்காயத் சாதி பலம் போன்றவை தான் அதற்கு காரணம். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா 
தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அப்போது பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவுக்கு மிகுந்த தயக்கத்துடன் முதல்-மந்திரி பதவியை வழங்கியது. 2 ஆண்டுகள் பதவியை அனுபவித்த பிறகு அந்த பதவியை விட்டு விலக வேண்டும் என்று கட்சி மேலிடம் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இந்த நிலையில் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்று வருகிற ஜூலை மாதத்துடன் 2 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதனால் எடியூரப்பாவை மாற்றுவது குறித்த பேச்சு பா.ஜனதாவில் எழுந்துள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த பேச்சு எழுந்திருப்பது எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.பா.ஜனதாவை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள், ஒரு கடிதத்தை பா.ஜனதா மேலிடத்திற்கு அனுப்பியுள்ளனர். அதில் எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால் அவரை மாற்ற வேண்டும் என்றும், இதுகுறித்து விவாதிக்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த உத்தரவிடுமாறும் கோரியுள்ளனர். அதன் அடிப்படையில் பா.ஜனதா மேலிட நிர்வாகிகள், ஒரு வாரத்திற்குள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

எடியூரப்பா மாற்றப்படுவார்
கர்நாடக அரசின் ஆட்சி தலைமை மாற்றம் குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, கனிமவளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்ளிட்டோரை டெல்லிக்கு அழைத்து உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.கொரோனா பரவலுக்கு மத்தியில் முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக பா.ஜனதாவில் பலம் வாய்ந்த தலைவராக இருக்கும் எடியூரப்பாவை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. பா.ஜனதாவில் பாதி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவருக்கு உள்ளதாகவும், அவரை நீக்கினால் தேன்கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

டெல்லியில் முகாம்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2023-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் தான் உள்ளது. அதற்குள் முதல்-மந்திரி பதவிக்கு புதியவர் ஒருவரை நியமித்து, அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலை எடியூரப்பா தலைமையில் சந்திப்பது இல்லை என்பதில் பா.ஜனதா மேலிடம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ எடியூரப்பா மகன்களில் ஒருவருக்கு மந்திரி பதவி வழங்கி எடியூரப்பாவை சமாளிக்க பா.ஜனதா மேலிடம் முயற்சி 
செய்து வருவதாக சொல்லப்படுகிறது.இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், "முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற எங்கள் கட்சியில் சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக சில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இது எங்களின் கவனத்திற்கு வநதுள்ளது. ஆனால் இதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார்.

Next Story