பிரதமர் மோடி, ரங்கசாமியுடன் பேச்சு: அமைச்சர் பதவிகள் குறித்து பேச புதுச்சேரிக்கு மத்திய மந்திரி வருகை; என்.ஆர்.காங்.- பா.ஜ.க. சமரசம் ஆகுமா?


பிரதமர் மோடி, ரங்கசாமியுடன் பேச்சு: அமைச்சர் பதவிகள் குறித்து பேச புதுச்சேரிக்கு மத்திய மந்திரி வருகை; என்.ஆர்.காங்.- பா.ஜ.க. சமரசம் ஆகுமா?
x
தினத்தந்தி 29 May 2021 11:34 PM GMT (Updated: 29 May 2021 11:34 PM GMT)

ரங்கசாமியுடன் பிரதமர் மோடி பேசியதை அடுத்து அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து பேச மத்திய மந்திரி புதுச்சேரி வருகிறார்.

அமைச்சர் பதவிக்கு போட்டி
புதுவை சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் வகையில் போட்டியிடவில்லை. தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை கைப்பற்றின.இதைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது இருந்தே அமைச்சர் பதவிகளை குறி வைத்து பா.ஜ.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலும் அமைச்சர் பதவி யாருக்கு? என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் 
காட்டப்பட்டது. இதையடுத்து விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பா.ஜ.க. பிடிவாதம்
இந்தநிலையில் பதவி ஏற்றுக் கொண்ட மறுநாளில் ரங்கசாமி கொரோனா பாதித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பி, தன்னை தடுமைப் படுத்திக் கொண்டார்.இதன்பின் தற்காலிக சபாநாயகர் அறிவிக்கப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ரங்கசாமி கலந்து கொண்டார். கடந்த சில நாட்களாக அலுவலகம் வந்து பணிகளை கவனித்து வருகிறார்.அடுத்ததாக சட்டசபை கூட்டப்படும் தேதியை தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் முறைப்படி அறிவிப்பார். அன்றைய தினம் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதையொட்டி அமைச்சரவை 
விரிவாக்கம் தொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் துணை முதல்- அமைச்சர் உள்பட 3 அமைச்சர் பதவிகள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.க. பிடிவாதம் பிடித்தது.

ரங்கசாமி திட்டவட்டம்
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்கள், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக சரி சமமாக அமைச்சர் பதவிகளை கேட்டு என்.ஆர்.காங்கிரசுக்கு பா.ஜ.க. தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் அமைச்சரவையில் பெரும்பான்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் ரங்கசாமி உறுதியாக இருந்து வருகிறார். துணை முதல்-அமைச்சர் உள்பட 2 அமைச்சர் பதவிகளை மட்டுமே தர முடியும். தற்போது உள்ள முதல்-அமைச்சர் உள்ளிட்ட 6 அமைச்சர் பதவிகளை 7 ஆக மத்திய அரசு உயர்த்தினால் அந்த கூடுதல் இடத்தை எடுத்துக்கொள்ளுமாறு ரங்கசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து மோதல் வலுத்து வருகிது.

தொலைபேசியில் மோடி பேச்சு
இந்த சூழலில் பிரதமர் மோடி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முதல்-அமைச்சராக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ரங்கசாமியின் உடல் நலம் குறித்தும் அவர் விசாரித்தார். அப்போது புதுவை அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மோடி பேசியதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் பா.ஜ.க.வின் புதுவை மாநில பொறுப்பினை கவனிக்கும் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி விரைவில் புதுச்சேரி வரவுள்ளார். அமைச்சரவை விரிவாக்கம், இலாகாக்கள் பிரிப்பு தொடர்பாக ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க.வுடன் சுமுகமான முடிவு ஏற்படும் என்று கூறப் படுகிறது. இதையும் மீறி இரு கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

Next Story