68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா


68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா
x
தினத்தந்தி 9 Oct 2021 6:36 AM GMT (Updated: 9 Oct 2021 6:36 AM GMT)

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் தேசிய விமான போக்குவரத்து நிறுவனமாக இருந்து வரும் இந்த நிறுவனம் கடந்து வந்த பாதை...

புதுடெல்லி,

15.10.1932: தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாடாவால் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் உருவாக்கம். கராச்சியில் இருந்து ஏர்மெயில் கடிதங்களுடன் பம்பாய்க்கு புஸ்மோத் விமானம் ஒன்றை டாடாவே ஓட்டி வந்தார்.

முதல் ஆண்டில் 1.60 லட்சம் மைல்கள் பயணம் செய்த இந்த விமானங்கள், 155 பயணிகள், 10.71 டன் சரக்குகளை ஏற்றிச்சென்றதுடன், ரூ.60 ஆயிரம் லாபமும் சம்பாதித்து.

1946: ஏர் இந்தியா என பெயர் மாற்றம்.

1948: ஐரோப்பாவுக்கு விமான போக்குவரத்தை தொடங்கிதன் மூலம், சர்வதேச விமான நிறுவனமாக மாறியது. 49 சதவீத பங்குகளை மத்திய அரசு வாங்கியது.

1953:டாடாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஏர் இந்தியா நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது.

2000-01: ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க வாஜ்பாய் அரசு முயற்சி. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-டாடா குழுமம் இணைந்து வாங்க திட்டம். ஆனால் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பின்வாங்கியதால் விற்பனை முயற்சி தோல்வி.

ஜூன் 2017: ஏர் இந்தியா மற்றும் அதன் 5 துணை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கேபினட் குழு கொள்கை அளவில் ஒப்புதல்.

மார்ச் 2018: ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 100 சதவீத பங்குகள், ஏ.ஐ.எஸ்.ஏ.டி.எஸ்-ன் 50 சதவீத பங்குகள் விற்பனை அறிவிப்பு. ஆனால் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

ஜூன் 2018: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக ஏர் இந்தியா விற்பனையை தாமதப்படுத்த அரசு முடிவு.

ஜனவரி 2020: ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு. ஏலத்துக்கான காலக்கெடு டிசம்பர் 14 வரை 5 முறை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 2020: ஒப்பந்தத்தை எளிமையாக்கிய மத்திய அரசு, முதலீட்டாளர்கள் ஏற்க வேண்டிய ஏர் இந்தியா கடனின் அளவை அவர்களே முடிவு செய்ய நெகிழ்வுத்தன்மையை அளித்தது.

டிசம்பர் 2020: ஏர் இந்தியாவை வாங்க பலர் முன்வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.

மார்ச் 2021: தினமும் ரூ.20 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்து வரும் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய வேண்டும் அல்லது மூட வேண்டும் என அப்போதைய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு.

ஏப்ரல் 2021: ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் ஏலத்தொகையை அறிவிக்குமாறு அரசு அறிவிப்பு. இதற்கு செப்டம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 2021: டாடா குழுமம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனர் அஜய் சிங் ஏலத்தொகை குறித்த முடிவை அரசுக்கு அளித்தனர்.

அக்டோபர் 2021: ஏர் இந்தியா விற்பனைக்கான ஏலத்தில் டாடா குழுமம் (ரூ.18 ஆயிரம் கோடி) வெற்றி பெற்றதாக மத்திய அரசு அறிவிப்பு.

ஜே.ஆர்.டி. டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் அவரது நிறுவனத்துக்கே மீண்டும் விற்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தான் புறப்பட்ட இடத்துக்கே ஏர் இந்தியா திரும்பி இருக்கிறது.

Next Story