பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலாவிடம் 4 செல்போன்கள் பறிமுதல்


பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலாவிடம் 4 செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Oct 2021 7:11 AM GMT (Updated: 9 Oct 2021 7:11 AM GMT)

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது சசிகலாவிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த செல்போன்கள் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். சசிகலா சிறையில் இருந்தபோது, அவருக்கு சட்டவிரோதமாக சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்கு கைமாறாக சிறை அதிகாரிகள் அவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து கர்நாடக ஊழல் தடுப்பு படையினர், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தண்டனை காலத்தில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்த போது அவர் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தி வந்ததாகவும், அதனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது சசிகலா சிறையில் சட்டவிரோதமாக 4 செல்போன்களை பயன்படுத்தி அதன் மூலம் 250-க்கும் மேற்பட்ட அழைப்புகளில் பேசியதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து போலீசார் அவர் பயன்படுத்திய 4 செல்போன்களை பறிமுதல் செய்து, அவற்றின் உண்மை தன்மையை அறிய பெங்களூரு மடிவாளாவில் உள்ள தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் அந்த பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Next Story