கொரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


கொரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x

பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் எழுச்சி பெறாமல் இருக்க வழிகாட்டும் நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவதுடன், தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் கூட்ட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசு ஆலோசனை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டம், கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதுவரை 94 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் அணிவகுத்து வருகிற நிலையில், தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசு நேற்று ஆலோசனை கூட்டம் ஒன்றை காணொலி காட்சி வழியாக நடத்தியது.

இந்த கூட்டத்தில் பெரிய மாநிலங்களான ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஷ்கார், குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 19 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், தடுப்பூசி திட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய மந்திரி எச்சரிக்கை
மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு தடுப்பூசி திட்ட முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்டிகைகள், சுப நிகழ்ச்சிகள், மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கால வழிகாட்டும் நெறிமுறைகள்படி கொண்டாடப்படாவிட்டால், கொரோனா கட்டுப்பாடு தடம்புரண்டு போகும்.கொரோனா கால நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும், தடுப்பூசி போடுவதில் வேகம் பிடிக்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு எதிராக முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 96 சதவீதத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவி்ல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story