அனல் மின் நிலையங்களில் நிலக்கரிக்கு பற்றாக்குறையா ? மத்திய அரசு விளக்கம்


அனல் மின் நிலையங்களில் நிலக்கரிக்கு பற்றாக்குறையா ? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 10 Oct 2021 8:25 AM GMT (Updated: 10 Oct 2021 8:34 AM GMT)

நிலக்கரி பற்றக்குறை உள்ளதாக பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வரும் நிலையில், மின் வாரிய அதிகாரிகளுடன் இன்று மத்திய மின் துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி  கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால், பல்வேறு மாநில முதல் மந்திரிகளும்  நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் மின் துறை அதிகாரிகளுடனான  ஆலோசனைக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய மின் துறை மந்திரி ஆர்.கே சிங் கூறியதாவது:   நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளது. 4 நாட்களுக்கு கையிருப்பு உள்ள நிலையில் தினமும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்படுகிறது. இதனால் மின் தட்டுப்பாடு வராது. நிலக்கரி இருப்பு தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை. இனியும் இருக்காது” என்றார். 

மேலும், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தது குறித்துப் பேசிய ஆர்.கே சிங், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது வாக்குகளும் இல்லாமல் போய் விட்டது. இதனால் திட்டங்களும் இல்லாமல் போய்விட்டது” என்ற பொருளில் சாடியுள்ளார். 


Next Story