அரசை கவிழ்க்க அமலாக்கத்துறையை பயன்படுத்த வேண்டாம் முடிந்தால் நேரடியாக மோதி பாருங்கள் பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 16 Oct 2021 5:39 AM GMT (Updated: 16 Oct 2021 5:39 AM GMT)

எனது அரசை கவிழ்க்க அமலாக்கத் துறையை பயன்படுத்தாமல் நேருக்கு நேர் மோதி பாருங்கள் என்று பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால் விடுத்தார்.

மும்பை,
சிவசேனாவின் ஆண்டு விழா பொதுக்கூட்டம் வருடந்தோறும் தசரா பண்டிகை அன்று தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடத்தப்படும். 
 அரங்கில் நடந்த விழா
இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், கட்சியினர் கலந்து கொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சிவசேனா தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடைபெறவில்லை. 
இந்தநிலையில் இந்த ஆண்டும் தொற்று பரவல் காரணமாக சிவசேனா தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடத்தப்படவில்லை. மாறாக சயான் சண்முகனந்தா அரங்கில் நடந்தது. முக்கிய நிர்வாகிகள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. இதில் முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். 
முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்கள்
அவர் பேசியதாவது:- 
போதைக்கு அடிமையானால் நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் சிதைப்பீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கான பசி மற்றவர்களின் குடும்பங்களை அழிக்கும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவசேனாவின் கொள்கைகள் ஒன்று தான். ஆனால் பாதை வேறு. கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு சிவசேனாவை ஊழல்கட்சி என பா.ஜனதா குற்றம் சாட்டுகிறது. உங்கள் பின்னால் வந்த போது நாங்கள் நல்லவர்களாக இருந்தோம். அமலாக்கத்துறையை பயன்படுத்த வேண்டாம். முன்னால் நின்று நேருக்கு நேராக மோதுங்கள். பல முறை கவிழ்க்க முயற்சி செய்தும் எங்களது அரசு அடுத்த மாதம் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்கள். மத்திய முகமைகளை பயன்படுத்தி எங்கள் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜனதா சவால் விடக்கூடாது. 
மத்திய, மாநில உறவு
பா.ஜனதாவுக்கு எதிராக நின்றதற்காக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளை கூறி கொள்ள விரும்புகிறேன். அதேபோல சிவசேனாவினரும், மராட்டிய அரசுடன் நிற்க வேண்டும். நாட்டில் உள்ள இந்துக்கள் தற்போது தான் உண்மையில் அபாய நிலையில் உள்ளனர். இந்துத்வாவை பயன்படுத்தி ஆட்சி அதிகார ஏணியில் ஏறியவர்கள் தற்போது பிரிட்டிஷ் பிரிவினைவாத கொள்கைக்கு மாறி உள்ளனர். 
பா.ஜனதா விடுதலை போராட்டத்தில் எதையும் செய்யவில்லை. பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம் என முழங்குவதால் மட்டும் நீங்கள் எல்லை காக்கும் போர் வீரனைவிட தேசப்பற்று மிக்கவராக மாறிவிட முடியாது. நீங்கள் காந்தி, வீரசாவர்க்கர் என யாரையும் புரிந்து கொள்ளவில்லை. விடுதலை போராட்டத்தில் நீங்கள் எதுவும் செய்யாத போது காந்தி, சாவர்க்கரை பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் மத்திய, மாநில உறவுகள், கூட்டாட்சி அமைப்பு மற்றும் நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொது மேடையில் விவாதம் நடத்த வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது பற்றி விவாதிக்கப்பட வேண்டும். 
 வேட்பாளர்கள் இறக்குமதி
நான் ஒரு இந்துத்வா வாதி. அதில் எனக்கு அவமானம் இல்லை. ஆனால் ஒரு முதல்-மந்திரியாக நான் எல்லோரையும் சமமாக நடத்துகிறேன். எங்கள் இந்துத்வா எங்களுக்கு சமதர்மத்தை போதித்து உள்ளது. பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததால், மராட்டியத்தை களங்கப்படுத்தி வருகிறது. 
உலகின் மிகப்பெரிய கட்சிக்கு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட கூட பிற கட்சியில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது (மராட்டியத்தில் நடைபெற உள்ள தெக்லூர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் சிவசேனா முன்னாள் எம்.எல்.ஏ. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்). 
இதேபோல நான் ஒரு முதல்-மந்திரி என உணரக்கூடாது என கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் சகோதரன் அல்லது வீட்டில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் (சமீபத்தில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னவில் தற்போதும் முதல்-மந்திரி போலவே உணருவதாக கூறியிருந்தார்). மராட்டியத்தில் மட்டும் தான் போதை பொருள் உள்ளதா?. மாநில போலீசார் இதுவரை ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். நீங்கள் ஏன் பிரபலங்களில் கைதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறீர்கள். முந்த்ரா துறைமுகம் எங்குள்ளது, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் எங்கே?. 
இவ்வாறு அவர் பேசினாா். 

Next Story