தேசிய செய்திகள்

காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு + "||" + To provide arms to non Kashmiri people; BJP MLA talk

காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு

காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
காஷ்மீரில் உள்ளூர்வாசிகள் அல்லாத நபர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து காணப்பட்டது.  இந்த மாத முதல் வாரத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர்.  அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர்.

இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈத்கா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதில் பானிப்பூரி விற்பனை செய்யும் அரவிந்த் குமார் ஷா என்பவர் கொல்லப்பட்டார்.  இவர் பீகாரின் பங்கா நகரை சேர்ந்தவர்.

இதேபோன்று புல்வாமாவில் சாகிர் அகமது என்ற நபரும் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் நகரை சேர்ந்தவர்.  பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ நகரில், காஷ்மீரை சேராத தொழிலாளர்கள் சிலர் மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், அவர்கள் ராஜா ரேஷி தேவ் மற்றும் ஜோகிந்தர் ரேஷி தேவ் என தெரிய வந்துள்ளது.  சன்சன் ரேஷி தேவ் என்ற மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார்.  இவர்கள் 3 பேரும் பீகாரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  இதனை சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் அறிவித்து உள்ளார்.  இதன்பின்பு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தினையும் வெளிப்படுத்தி உள்ளார்.  பண்டிகை காலங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலை அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஞானேந்திர சிங் ஞானு இன்று கூறும்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளூர்வாசிகள் அல்லாத நபர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்க வேண்டும்.  இதனால், அவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

இதுபோன்ற பயங்கரவாதிகள் கோழைகள்.  ஏழைகள் மற்றும் வசதியற்ற நபர்களை தாக்குவதனால் அச்ச சூழலை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.