பணத்திற்காக மூத்த மனைவியின் 8 வயது மகனுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்த 2-வது மனைவி

மத்திய பிரதேசத்தில் பணத்திற்காக கணவரின் மூத்த மனைவியின் 8 வயது மகனுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்து 2-வது மனைவி கொலை செய்த அதிர்ச்சி விவரம் தெரிய வந்துள்ளது.
பணத்திற்காக மூத்த மனைவியின் 8 வயது மகனுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்த 2-வது மனைவி
Published on

குவாலியர்,

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் வசித்து வருபவர் ராஜூ பரிஹார். இவரது மனைவி சீமா பரிஹார் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து உள்ளார். இதனை தொடர்ந்து ராஜூவுக்கு விபத்து காப்பீடாக ரூ.12 லட்சம் பணம் கிடைத்து உள்ளது.

அதில், தனது மகன் நிதின் பரிஹார் பெயரில் வருங்கால சேமிப்புக்காக ரூ.8 லட்சம் வைப்பு தொகையாக போட்டு வைத்து உள்ளார். இந்நிலையில் ஆராதனா என்ற ஜூலி பரிஹார் என்பவரை ராஜூ திருமணம் செய்துள்ளார்.

ஜூலிக்கு, நிதின் பெயரில் கணவர் ரூ.8 லட்சம் பணம் சேமிப்பில் போட்டுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அந்த பணம் முழுவதும் தனக்கு கிடைக்க வேண்டும் என்ற பேராசையில், திட்டம் தீட்டியுள்ளார்.

இதன்படி, கணவர் வெளியே சென்ற பின்பு, நிதினிடம் டீ சாப்பிடுகிறாயா? என கேட்டு உள்ளார். சரி என்றதும் டீயில் விஷம் கலந்து கொடுத்து உள்ளார். அதன்பின், கணவர் ராஜூ வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

சோர்வாக காணப்பட்ட நிதினிடம் விவரம் கேட்டுள்ளார். அதற்கு, ஜூலி டீ கொடுத்த பின்பு, உடல்நல குறைவு ஏற்பட்ட விசயங்களை தந்தையிடம் நிதின் கூறியுள்ளான்.

இதன்பின்பு, உடனடியாக நிதினை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், சிறப்பு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். எனினும், உயர் சிகிச்சை அளித்தும் அது பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்து உள்ளான்.

நிதின் கூறிய தகவல் அடிப்படையில், மொரார் காவல் நிலையத்தில் ராஜூ புகார் அளித்து உள்ளார். பிரேத பரிசோதனையில் நிதினின் உடலில் விஷம் இருப்பது தெரிய வந்தது.

இந்த வழக்கில் 13 சாட்சிகள் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. தனது வளர்ப்பு மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் ஜூலிக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com