அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி


அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
x

பல்லாரி அருகே, சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

பல்லாரி:

பஸ் மோதியது

பல்லாரி அருகே ஹலகுந்தி கிராமத்தில் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு அருகில் சமூக நலத்துறைக்கு சொந்தமான விடுதியும் உள்ளது. அந்த விடுதியிலும் மாணவர்கள் தங்கி உள்ளனர். இதுபோல எம்மிகனூரை சேர்ந்த கனகராஜ்(வயது 19), முருதி என்ற கிராமத்தை சேர்ந்த சங்கர்(18), சந்தூர் தாலுகா நாகேனஹள்ளியை சேர்ந்த ஹொன்னூரா(22) ஆகிய 3 மாணவர்களும் கல்லூரியில் படித்து வந்ததோடு, விடுதியிலும் தங்கி இருந்தனர்.

இவர்கள் 3 பேரும் கல்லூரி முடிந்த பின்னர் பல்லாரியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியர்களாகவும் பகுதி நேரத்தில் வேலை செய்து வந்து உள்ளனர். இந்த நிலையில் ஓட்டலில் வேலை முடிந்ததும் நேற்று அதிகாலை 2 மணியளவில் 3 பேரும் பல்லாரியில் இருந்து ஒரு வாகனம் மூலம் ஹலகுந்திக்கு வந்தனர். பின்னர் தாங்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்ல சாலையை நடந்து கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து கலபுரகி நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 மாணவர்கள் மீதும் மோதியது.

மாணவர்கள் சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் பல்லாரி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லாரி விம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சக மாணவர்கள் நேற்று காலை விம்ஸ் ஆஸ்பத்திரியின் பிணவறை முன்பு கூடினர்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த விடுதி அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் மாணவர்கள் விபத்தில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பலியான 3 மாணவர்களும் கடந்த 2 நாட்களாக விடுதிக்கே வரவில்லை என்று வார்டன் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் விடுதி அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை விடுதி வார்டன், ஊழியர்கள் தொல்லைப்படுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டு கூறினர்.

பரபரப்பு

மேலும் விடுதி ஊழியர்களை தாக்கவும் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. பின்னர் மாணவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பல்லாரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பல்லாரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story