பெண்கள் உள்பட 3 பேர் சாவு
சிக்பள்ளாப்பூர் அருகே, லாரியும், ஆட்டோவும் மோதி கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் பலியானர்கள். 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
சிக்பள்ளாப்பூர்:-
லாரி- ஆட்டோ மோதல்
துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயை சேர்ந்தவர் ஜெய்ரா பீ (வயது 70). இவரது உறவினர் மைலானி (25). இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மைலானி தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு ஜெய்ரா பீயுடன் சேர்ந்து சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா அலகாபூரில் நடந்த உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மைலானி, அவரது 2 குழந்தைகள், ஜெய்ரா பீ ஆகியோர் ஒரு ஆட்டோவில் கொரட்டகெரேவுக்கு சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை கலந்தர் என்பவர் ஓட்டி
சென்றார். கவுரிபிதனூர் அருகே ரங்கனஹள்ளி கேட் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கேன்டர் லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோ உருக்குலைந்தது.
3 பேர் சாவு
மேலும் ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி ஜெய்ரா பீ, மைலானி, கலந்தர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மைலானியின் 5 மற்றும் 3 வயது குழந்தைகள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடின. விபத்து பற்றி அறிந்ததும் கவுரிபிதனூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 குழந்தைகளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து கவுரிபிதனூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.