மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் குடிக்க குதித்து பரிதவித்த 30 குரங்குகள் உணவின்றி பரிதாப சாவு


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் குடிக்க குதித்து பரிதவித்த 30 குரங்குகள் உணவின்றி பரிதாப சாவு
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் குடிக்க குதித்து பரிதவித்த 30 குரங்குகள் உணவின்றி பரிதாபமாக செத்தன.

பெங்களூரு:

கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா ஹலகர்டி கிராமத்தில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவது இல்லை. இந்த நிலையில் மழை காரணமாக அந்த தொட்டியில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் அங்கு வந்த 30 குரங்குகள், தொட்டிக்குள் குதித்து தண்ணீரை குடித்தன. ஆனால் பின்னர் அவைகளால் தொட்டியில் இருந்து மேலே வர முடியவில்லை. இதனால் அந்த குரங்குகள் உணவு இல்லாமல் பரிதாபமாக ஒவ்வொன்றாக செத்துவிட்டன. இவ்வாறாக 30 குரங்குகளும் செத்துவிட்டன.

நேற்று காலையில் சில குரங்குகள் தொட்டியின் மேல் பகுதியில் ஆக்ரோஷமாக கத்தியபடி சுற்றிக் கொண்டிருந்தன. மேலும் துர்நாற்றமும் வீசியது. இதையடுத்து கிராம மக்கள், தொட்டியில் ஏறி பார்த்தபோது குரங்குகள் பரிதாபமாக செத்துக்கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் வனத்துறையினருக்கும், கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடமும் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளும், வனத்துறையினரும் வந்து செத்துக்கிடந்த குரங்குகளின் உடல்களை மீட்டனர். பின்னர் அவற்றை கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் புதைத்தனர். இதற்கிடையே பயன்படுத்தப்படாமல் உள்ள அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முழுவதுமாக மூட கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story