அனைத்து தரப்பினருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம்; குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு


அனைத்து தரப்பினருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம்; குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு
x

அனைத்து தரப்பினருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என குஜராத்தில் பேசிய டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



சூரத்,



குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நீண்டகால பா.ஜ.க. ஆட்சிக்கு போட்டியாக ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இதனால், வாக்குகளை இந்த இரு கட்சிகள் பிரிக்க கூடும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரை அவர்களிடம் இருந்து விலகி இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆளும் பா.ஜ.க.வின் பி மற்றும் சி அணிகளே இந்த இரு கட்சிகள் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை வரிசையாக செயல்படுத்தியும் வருகிறது.

இதனை தொடர்ந்து குஜராத்திலும் தனது தேர்தல் வேட்டையை ஆம் ஆத்மி தொடங்கி நடத்தி வருகிறது. இதன்படி குஜராத்துக்கு வருகை தந்துள்ள டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று சூரத் நகரில் மக்களிடையே கூட்டத்தில் பேசும்போது, அனைத்து உள்ளூர் நுகர்வோர்களுக்கும் நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

இதுதவிர, அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் 24x7 என்ற வகையில் மின்சார வினியோகம் கிடைக்க உறுதி செய்வோம். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டண பில்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், சில பேர் ரேவரி (இனிப்பு) வழங்குவது பற்றி பேசி வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவச அடிப்படையில் இனிப்பு வழங்கும்போது, அதற்கு பெயர் பிரசாதம் (பக்தியுடன் வழங்குவது). ஆனால், உங்களது சொந்த நண்பர்கள் மற்றும் மந்திரிகளுக்கு அதனை இலவச அடிப்படையில் வழங்கும்போது, அதற்கு பெயர் பாவம் என கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகள் ஆபத்து நிறைந்தவை என குறிப்பிட்டார். அதற்கு பதிலடியாக கெஜ்ரிவால், மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றை மக்களுக்கு தரமுடன் வழங்கி வருகிறோம். இது இலவசம் ஆகாது என கூறினார் என்பது கவனிக்கத்தக்கது.


Next Story