மோர்பி பால விபத்து: 3 ஆயிரம் டிக்கெட், வேலைக்கு தினக்கூலி தொழிலாளர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்


மோர்பி பால விபத்து: 3 ஆயிரம் டிக்கெட், வேலைக்கு தினக்கூலி தொழிலாளர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்
x

135 பேரை பலிகொண்ட மோர்பி பாலம் விபத்துக்குள்ளான தினத்தன்று 3 ஆயிரத்து 165 டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது பாரம் தாங்காமல் திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது. இதில், விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். 135 பேரை பலி வாங்கிய விபத்து தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மொர்பி பால விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குஜராத் அரசு அமைத்த 5 பேர் கொண்ட விசாரணை குழு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், 135 பேரை பலிகொண்ட மொர்பி பால விபத்து தொடர்பாக மொர்பி மாவட்ட கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, விபத்துக்கான காரணம் தொடர்பாக முதற்கட்ட அறிக்கையை குஜராத் அரசு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:-

மொர்பி பாலத்தை பராமரிக்கும் ஒரிவா என்ற தனியார் நிறுவனம் விபத்து நடந்த தினத்தன்று 3 ஆயிரத்து 165 டிக்கெட்டுகளை விற்பனை செய்ய பாலத்தில் பணியாற்றும் டிக்கெட் விநியோகஸ்தரிடம் கொடுத்துள்ளது. அவை அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யபடாதபோதும், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் எடைதாங்கும் திறன் குறித்து ஒரிவா நிறுவனம் கணிக்கவில்லை.

தொங்கு பாலத்தின் கேபிள் கம்பிகள் துருபிடித்துள்ளது. பாலத்தை தாங்கும் கம்பிகள் அறுந்துள்ளது. பாலத்தை தாங்கும் கம்பிகளையும், கேபிள் கம்பிகளையும் இணைக்கும் பகுதியில் உள்ள 'பொல்ட்டுகள்' காணவில்லை.

ஒப்பந்ததாரரால் புதிதாக அமைக்கப்பட்ட கனமான தரைப்பகுதியின் எடையை பழைய கேபிள் கம்பிகளால் தாங்கும் திறன் இல்லை.

ஒரிவா நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட தொங்கு பாலத்தின் டிக்கெட் விற்பனையாளர், பாலத்தின் காவலாளிகள் என அனைவருமே தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர். கூட்ட நெரிசலை மேலாண்மை செய்வது குறித்து இவர்களுக்கு எந்தவித நிபுணத்துவமும் இல்லை.

தொங்குபாலத்தின் மீது எவ்வளவு மக்களை அனுமதிக்கப்படவேண்டும்?, பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன? என்பது குறித்து காவலாளிகளுக்கு தெரியப்படுத்தவில்லை.

விபத்து நடைபெறும்பட்சத்தில் மக்கள் உயிரை காப்பாற்ற உயிர்காப்பாளர்கள் அல்லது படகுகளை ஒரிவா நிறுவனம் வைக்கவில்லை.

நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலேயே தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story