கொலை, பலாத்கார வழக்கில் சிக்கிய 330 வேட்பாளர்கள்...!! குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டி


கொலை, பலாத்கார வழக்கில் சிக்கிய 330 வேட்பாளர்கள்...!! குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டி
x

குஜராத் சட்டசபை தேர்தலில் கொலை, பலாத்காரம் உள்பட குற்ற வழக்குகளில் சிக்கிய 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


புதுடெல்லி,


குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது.

இந்த தேர்தலில் 1,621 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாவது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்கின்றனர்.

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டி போடும் மொத்தமுள்ள 1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

இவர்களில் முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளில் 167 வேட்பாளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் 163 வேட்பாளர்களும் என மொத்தம் 330 பேர் போட்டியில் உள்ளனர் என அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது..

அவர்களில் 61 வேட்பாளர்களுடன் ஆம் ஆத்மி முதல் இடம் வகிக்கின்றது. இதுபற்றி தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் குற்ற வழக்குகளில் சிக்கிய 238 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


Next Story