மீசை இல்லாமல் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது - மீசைப்பெண் ஷைஜூ
ஆண்களின் மீசை போல வளர்ந்து இருப்பதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அது எனக்கு பிடித்து இருந்தது. எனவே நான் அந்த முடியை அகற்றவில்லை.
திருவனந்தபுரம்:
பெண்கள் கிரீம்கள், ரேசர்கள் மற்றும் போன்றவற்றைக் கொண்டு முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவது வழக்கம் ஆனால் இந்தியாவில் மீசை வைக்க விரும்பும் ஒரு பெண்மணியும் இருக்கிறார். பல முறை பல அவரை கேலி செய்து அவர் தனது மீசையை எடுக்கவில்லை.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ. (வயது 35). ஷைஜூவின் முகத்தில் ஆண்களை போல முறுக்கு மீசை உள்ளது. இந்த படத்தை அவர் சமூகவலைதளத்தில் தனது டி.பி.யாக வைத்துள்ளார். ஆண்கள் மட்டுமே மீசையுடன் இருப்பதை பார்த்து வந்த மக்களுக்கு பெண் ஒருவர் மீசையுடன் காட்சி அளிப்பது வியப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்ல ஷைஜூவை கேலியும் செய்தனர்.
இதுகுறித்து ஷைஜூவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- எனது முகத்தில் லேசான பூனை முடி காணப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உதட்டின் மேல் பகுதியில் காணப்பட்ட முடி அடர்த்தியாக இருந்தது.
ஆண்களின் மீசை போல வளர்ந்து இருப்பதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அது எனக்கு பிடித்து இருந்தது. எனவே நான் அந்த முடியை அகற்றவில்லை.
இதற்காக என்னை பலர் கேலி செய்தனர். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. மீசை இருப்பதால் எனக்கு அசவுகரியம் எதுவும் இல்லை. அதனை வளர்க்க தொடங்கிய பின்னர் மீசை இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.
கொரோனா காலத்தில் மாஸ்க் அணிவதற்கு கூட எனக்கு வெறுப்பாக இருந்தது. மாஸ்க் அணிந்தால் எனது மீசை வெளியே தெரியாது என்பதால் நான் மிகவும் கவலைப்பட்டேன். இந்த மீசை எனது மகளுக்கும் பிடித்து இருக்கிறது. பின்னர் நான் எதற்கு மற்றவர்கள் கூறுவதை கேட்டு வருத்தப்பட வேண்டும். யார் என்ன சொன்னாலும் நான் எனது மீசையை அகற்ற போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சில பெண்களுக்கு உடலின் சில பகுதிகளில் முடி அதிகமாக இருக்கும். இந்த முடி உதடுகளின் மேல், கன்னம், மார்பு மற்றும் அடிவயிற்றின் கீழ் பகுதியில் காணப்படுகிறது மற்றும் காலப்போக்கில் அடர்த்தியாகிறது.
மருத்துவ மொழியில், இந்த நிலை ஹிர்சுட்டிசம் என்று அழைக்கப்படுகிறது. உடலில் ஆண் ஹார்மோன் அதிகரிப்பதாலோ அல்லது பெண் ஹார்மோன் குறைவதாலோ ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு தேவையற்ற முடிகள் பல இடங்களில் வருகிறது.