கர்நாடகத்தில் வெளிஒப்பந்த அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 350 டிரைவர்கள் நியமனம்


கர்நாடகத்தில் வெளிஒப்பந்த அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 350 டிரைவர்கள் நியமனம்
x

வெளிஒப்பந்த அடிப்படையில் 350 டிரைவர்களை நியமனம் செய்ய கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

பெங்களூரு:

டிரைவர்கள் பற்றாக்குறை

கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்த போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்கியது. இதையடுத்து மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 17 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறையால் குறிப்பாக டிரைவர்கள் பற்றாக்குறையால் பஸ்களை இயக்குவதில் போக்குவரத்து கழகங்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன. சில பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

350 டிரைவர்கள் நியமனம்

இந்த நிலையில் வெளிஒப்பந்தம் (அவுட்சோர்சிங்) அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் 350 டிரைவர்களை நியமனம் செய்வது குறித்து அரசு போக்குவரத்து கழகங்கள் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த டிரைவர்களுக்கு மாத சம்பளம் ரூ.23 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படும். மாதம் 25 நாள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு வேறு எந்த படியும் கிடையாது. 25 நாட்கள் பணியாற்றாவிட்டால் சம்பளம் குறைக்கப்படும்.

இந்த 350 டிரைவர்களில் 150 டிரைவர்கள் மங்களூருவுக்கும், 100 டிரைவர்கள் புத்தூருக்கும், ராம்நகர், சாம்ராஜ்நகருக்கு தலா 50 டிரைவர்கள் ஒதுக்கப்பட இருக்கிறார்கள். இந்த 350 டிரைவர்களை வழங்கும் நிறுவனத்திற்கு முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய நியமன முறை

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை மோசமாக உள்ளது. அதனால் புதிய ஊழியர்கள் நியமனங்களை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மங்களூரு மற்றும் புத்தூரில் பணியாற்ற விரும்புவது இல்லை.

தற்போதைய தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க கூடுதலாக 1,000 டிரைவர்கள் தேவை. அதனால் அரசு இந்த புதிய நியமன முறையை அறிமுகம் செய்கிறது" என்றாா்.

தனியார்மயமாக்க முயற்சி

இதற்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அனந்த சுப்பாராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர்களை வெளிஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய முடிவு செய்திருப்பது என்பது தனியார்மயம் ஆக்குவதற்கான முதல் முயற்சி ஆகும். இது பொது போக்குவரத்து கழகங்கள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது. டிரைவர் பணி என்பது திறன் மிகுந்த வேலை ஆகும். அது சிக்கலான பணியும் கூட. வெறும் ரூ.23 ஆயிரம் சம்பளத்திற்கு டிரைவர்கள் எப்படி பணியாற்றுவார்கள்?. தனியார் டிரைவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வாய்ப்பு இல்லை. அதனால் அரசு தனது முடிவை கைவிட வேண்டும்" என்றார்.


Next Story