4-வது மாடியில் இருந்து வீசி குழந்தையை கொன்ற வழக்கு: பெண் டாக்டர் மீது 193 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


4-வது மாடியில் இருந்து வீசி குழந்தையை கொன்ற வழக்கு:  பெண் டாக்டர் மீது 193 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 7 Nov 2022 6:45 PM GMT (Updated: 7 Nov 2022 6:46 PM GMT)

பெங்களூருவில் 4-வது மாடியில் இருந்து வீசி குழந்தையை கொன்ற வழக்கில் பெண் டாக்டர் மீது 193 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். மனவளர்ச்சி குன்றியிருந்ததால் குழந்தையை கொன்றது தெரியவந்தது.

பெங்களூரு: பெங்களூருவில் 4-வது மாடியில் இருந்து வீசி குழந்தையை கொன்ற வழக்கில் பெண் டாக்டர் மீது 193 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். மனவளர்ச்சி குன்றியிருந்ததால் குழந்தையை கொன்றது தெரியவந்தது.

மனவளர்ச்சி குன்றிய குழந்தை

பெங்களூரு சம்பங்கிராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் கிரண். ஐ.டி. ஊழியர். இவரது மனைவி சுஷ்மா. இவர் டாக்டர் ஆவார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை இருந்தது. அந்த குழந்தைக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டு இருந்தது. அதாவது மனவளர்ச்சி குன்றியிருந்த அந்த குழந்தைக்கு பிறவியிலேயே பேச்சு ஆற்றல் இல்லை என கூறப்படுகிறது. இவர்கள் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி தனது குடியிருப்பின் 4-வது மாடியில் குழந்தையுடன் சுஷ்மா நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென குழந்தையை அங்கிருந்து தூக்கி வீசினார்.

இதில் கீழே விழுந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், சுஷ்மாவும் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்றார். அப்போது அருகில் நின்றவர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பங்கிராம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுஷ்மாவை கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தை மனவளர்ச்சி குன்றியிருந்ததால், சுஷ்மா பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் குழந்தை உடல்நலம் குணமாகவில்லை.

34 சாட்சியங்கள்

இதனால் மனமுடைந்த சுஷ்மா குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 4-வது மாடியில் இருந்து குழந்தையை தூக்கிவீசி கொலை செய்த வழக்கு தொடர்பாக சம்பங்கிராம்நகர் போலீசார் 193 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் குழந்தையை சுஷ்மா தூக்கி வீசியதை நேரில் கண்ட 3 பேர் சாட்சி கூறி உள்ளனர். மேலும், அவர்கள் உள்பட 34 பேர் அளித்த சாட்சியங்களில் பேரில் இந்த குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

அதில் போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுஷ்மாவின் 4 வயது குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை. ஆனால் அந்த குழந்தை ஆட்டிசம் எனப்படும் மனவளர்ச்சி குன்றி இருந்தது. குழந்தைக்கு சிகிச்சை அளித்தும், குணமாகவில்லை. உறவினர்கள் பலரும் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என சுஷ்மாவை அவதூறாக பேசி வந்துள்ளனர். இது சுஷ்மாவை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. எனவே குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் குணமடைய வாய்ப்பு இல்லை.

திட்டமிட்டு கொலை

இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவர் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் 2 முறை மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீச முயற்சி செய்துள்ளார். அப்போது கீழ் பகுதியில் மரம் இருந்துள்ளது. இதனால் 3-வது முறையாக அவர் 4-வது மாடியில் இருந்து தரைப்பகுதியில் சிமெண்டு தளம் அமைத்திருந்த இடத்தை தேர்வு செய்து திட்டமிட்டு அவர் குழந்தையை வீசி கொலை செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற சுஷ்மா தான் மனம் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக போலீசில் கூறி நாடகமாடினார். இதையடுத்து அவரை போலீசார் நிமான்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தனர். அந்த அறிக்கையில், சுஷ்மா மனநலம் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்த தகவலும் குற்றப்பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story