திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது; ரூ.36 லட்சம் தங்க நகைகள் மீட்பு
பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.36 லட்சம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
பெங்களூரு:
பெங்களூரு ஹெண்ணூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் வீடுகளில் திருடி வந்த 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் முகமது அல்தாப், அஜாம் கான், சையத் சதீம் என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும் ஹெண்ணூர் மற்றும் சம்பிகேஹள்ளி பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்தார்கள். இவ்வாறு கிடைக்கும் பணத்தை 3 பேரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்தனர். கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய ரூ.23½ லட்சம் மதிப்பிலான 522 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இதே ஹெண்ணூர் போலீசார், பூட்டிய வீடுகளில் திருடி வந்த கல்யாண்நகரை சேர்ந்த கார்த்திக் என்ற எஸ்கேப் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். இவர், ஹெண்ணூர், நெலமங்களா உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி வந்தது தெரிந்தது. கார்த்திக் கொடுத்த தகவலின் பேரில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் ஹெண்ணூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.