அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப சாவு; கோவாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டுதிரும்பியபோது சோகம்


அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப சாவு; கோவாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டுதிரும்பியபோது சோகம்
x

அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கார்வார்:

4 பேர் சாவு

உத்தர கன்னடா மாவட்டம் (கார்வார்) அங்கோலா தாலுகா பலேகுலி நெடுஞ்சாலையில் நேற்று காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் ஒரு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து அந்த பகுதியினர் உடனடியாக அங்கோலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள்

விசாரணையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்த டிரைவர் அருண் பாண்டியன், ஆனந்த் சேகர், நந்தகுமார், ஜேம்ஸ் ஆல்பர்ட் ஆகியோர் என்பதும், காயமடைந்தவர்கள் முகமது லத்தீப் உள்பட 3 பேர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 7 பேரும் கோவாவுக்கு சென்று புத்தாண்டை கொண்டாடினர். பின்னர் அவர்கள் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அங்கோலா பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி, சாலை தடுப்பை உடைத்து கொண்டு மறுபுறத்துக்கு சென்று எதிரே வந்த கர்நாடக அரசு பஸ் மீது மோதியது தெரியவந்தது.

இதையடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுபோதையில் காரை அவர்கள் ஓட்டினரா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story