ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம்: குஜராத் கின்னஸ் சாதனை


ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம்: குஜராத் கின்னஸ் சாதனை
x
தினத்தந்தி 1 Jan 2024 9:23 AM GMT (Updated: 1 Jan 2024 9:51 AM GMT)

சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காந்திநகர்,

4 ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து, குஜராத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்வில் முதல்-மந்திரி பூபேந்திரபாய் பட்டேல் பங்கேற்றார். மோதரா சூரியக் கோவிலில் இந்த புத்தாண்டையொட்டி காலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் ஏஎன்ஐ செய்தியாளரிடம் கூறும்போது,

நிறையப் பேர் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க வந்துள்ளேன். இதுவரை இத்தகைய சாதனையை யாரும் செய்ததில்லை.

மொதேராவில் நடைபெற்ற சூர்ய நமஸ்கார நிகழ்வைப் பொறுத்தவரை, சுமார் 4 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரத்தைச் செய்துள்ளனர். 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள், சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர் என்று கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் தெரிவித்தார்.

குஜராத் உள்துறை மந்திரி சங்வி கூறும்போது, இன்று குஜராத் நாட்டிலேயே முதல் உலக சாதனை படைத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற யோக தின நாளில் (ஜூன் 21) குஜராத் மாநிலம் கின்னஸ் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

குஜராத் 2024 ஐ ஒரு குறிப்பிடத்தக்க சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் மோதேரா சூரியன் கோயிலும் அடங்கும், அங்கு அனைவரும் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர். யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும்.

சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதனால் வரும் நன்மைகள் அளப்பரியவை என்றார்.


Next Story