ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கொலையில் மகன்கள் உள்பட 5 பேர் கைது
சிகாரிப்புராவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கொலையில் மகன்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
சிவமொக்கா:-
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கொலை
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பா அருகே போவி கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரப்பா. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான இவர், அந்தப்பகுதியில் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு மஞ்சுநாத், உமேஷ் ஆகிய 2 மகன்கள் உள்பட 5 பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவி இறந்ததால் அவர் விதவை பெண் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 29-ந்தேதி அந்தப்பகுதியில் உள்ள கால்வாயில் நாகேந்திரப்பா பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிராளகொப்பா போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்து உடலை கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து
சிராளகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
மகன்களிடம் விசாரணை
இந்த நிலையில், போலீசாருக்கு நாகேந்திரப்பாவின் முதல் மனைவியின் மகன்களான மஞ்சுநாத் மற்றும் உமேஷ் ஆகியோரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது, சொத்து தகராறில் தந்தை நாகேந்திரப்பாவை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை 2 பேரும் ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சொத்து தகராறு
போலீஸ் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு நாகேந்திரப்பா விவசாயத்தில் கவனம் செலுத்தி வந்தார். அவர் தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தார். இதன்மூலம் அவருக்கு நல்ல விளைச்சலும், வருமானமும் இருந்துள்ளது. இதனால் அவரது மகன்கள் மஞ்சுநாத் மற்றும் உமேஷ் ஆகியோர் சொத்தை பிரித்து கொடுக்கும்படி நாகேந்திரப்பாவிடம் கேட்டு வந்துள்ளனர். ஆனால் நாகேந்திரப்பா சொத்தை பிரித்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவரது மகன்கள் 2 பேரும் தொடர்ந்து தகராறில் ஆடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் முதல் மனைவி இறந்ததும் 2-வதாக விதவை பெண் ஒருவரை நாகேந்திரப்பா திருமணம் செய்தார். இந்த நிலையில் 2-வது மனைவி மூலம் ஒரு மகன் பிறந்தான். இதனால் தங்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்காதோ என்று அவரது முதல் மனைவியின் மகன்கள் மஞ்சுநாத் மற்றும் உமேஷ் கருதினர்.
கூலிப்படை மூலம்...
இதனால் தந்தை நாகேந்திரப்பாவை தீர்த்தக்கட்ட அவர்கள் 2 பேரும் முடிவு செய்தனர். அதன்படி கூலிப்படையை சேர்ந்த ரிஸ்வான், ஹபிபுல்லா, சுகைல் ஆகியோரிடம் ரூ.5 லட்சம் கொடுத்து தந்தையை கொலை செய்ய கூறினர். அதன்படி கூலிப்படையை சேர்ந்த 3 பேரும் கடந்த மாதம் 29-ந்தேதி நாகேந்திரப்பாவை புனேடஹள்ளி கிராமத்துக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தனர். பின்னர் அவரை 3 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கால்வாயில் வீசி சென்றனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
5 பேர் கைது
இதையடுத்து போலீசார் நாகேந்திரப்பாவின் மகன்கள் மஞ்சுநாத், உமேஷ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ரிஸ்வான், ஹபிபுல்லா, சுகைல் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.