வாலிபர் தற்கொலை கள்ளக்காதலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கலபுரகியில் வாலிபர் தற்கொலைக்கு காரணமான கள்ளக்காதலிக்கு மாவட்ட கோர்ட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கலபுரகி:-
வாலிபர் தற்கொலை
கலபுரகி டவுன் கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வாடகை வீடுகள் உள்ளன. இந்த நிலையில் அவரது வீட்டிற்கு நாகராஜ சித்தையா என்பவர் வாடகைக்கு வந்தார். இந்த நிலையில் இவருக்கும், அனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் நாகராஜாவை குடும்பத்தை பிரிந்து தன்னுடன் வாழுமாறு கூறி உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார்.இந்த நிலையில் அனிதாவின் தொல்லை தாங்க முடியால் வாடகை வீட்டில் நாகராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்காதலிக்கு சிறை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய டவுன் போலீசார் அனிதாவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கலபுரகி மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் நாகராஜாவின் தற்கொலைக்கு அனிதா தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததாக நீதிபதி குறிப்பிட்டார். மேலும் அனிதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார்.