கடவுள் கிருஷ்ணர் சிலையை ஆற்றில் கரைக்க சென்ற 5 வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கடவுள் கிருஷ்ணர் சிலையை யமுனை ஆற்றில் கரைக்க சென்ற 5 வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,
கிரேட்டர் நொய்டாவின் சலார்பூர் கிராமத்தில் வசிக்கும் வாலிபர்கள் 6 பேர் கிருஷ்ண ஜெயந்தியை அடுத்து கடவுள் கிருஷ்ணர் சிலை ஒன்றை யமுனை ஆற்றில் கரைக்க எடுத்து சென்றுள்ளனர்.
இதில், ஆற்றின் நடுவில் சிலையானது சிக்கி கொண்டது. இதனை தொடர்ந்து வாலிபர்கள் 6 பேரும் ஆற்றுக்குள் இறங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் அனைவரும் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு நீருக்குள் மூழ்க தொடங்கினர்.
அவர்களில் ஒருவர் நீந்தி கரை சேர்ந்து உள்ளார். மற்றவர்களை பற்றி எதுவும் தெரியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு டெல்லி போலீசார், மீட்பு குழுவினருடன் சென்றுள்ளனர்.
இதன்பின் நடந்த மீட்பு பணியில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்கள் அங்கித் (வயது 20), லக்கி (வயது 20), லலித் (வயது 20), பீரு (வயது 20) மற்றும் ரீத்து ராஜ் என்ற சனு (வயது 20) என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
அவர்கள் அனைவரின் உடல்களும் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.