மதவழிபாடு நடத்த சென்ற மதபோதகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை; வீடு முழுக்க மிளகாய்பொடி தூவல்


மதவழிபாடு நடத்த சென்ற மதபோதகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை; வீடு முழுக்க மிளகாய்பொடி தூவல்
x

மதபோதகரும் அவரது மனைவியும் மதவழிபாட்டு தலத்திற்கு சென்ற நிலையில் சமயலறை வழியாக நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கூரப்படா கிராமத்தில் கிருஸ்தவ மதவழிபாட்டு தலம் உள்ளது. இந்த மதவழிபாட்டு தலத்தில் மதபோதகராக இருப்பவர் ஜாக்கப் நின்னன். இவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கிராமத்தில் உள்ள கிருஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வழிபாடு நடத்த சென்றுள்ளார்.

ஜாக்கப் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டை பூட்டிவிட்டு மதவழிபாட்டு தலத்திற்கு சென்ற நிலையில் வீட்டின் பின்புறம் சமையல் அறை கதவை உடைத்துக்கொண்டு மாலை கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த 55 சவரன் நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். பின்னர், மோப்ப நாயிடம் சிக்காமல் இருக்க கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய்ப்பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.

மத வழிபாட்டை முடித்துவிட்டு மதபோதகர் ஜாக்கப் மற்றும் குடும்பத்தினர் இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீடு முழுவதும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்ததும், வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த ஜாக்கப் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அங்கு, வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில நகைகள் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததையும் அவர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து, அந்த நகைகளை ஜாக்கப் கைப்பற்றினார். 55 சவரன் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அதில் 23 சவரன் நகை மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கொள்ளையடித்துவிட்டு சில சவரன் நகைகளை கொள்ளையர்கள் மண்ணுக்குள் புதைத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து எஞ்சிய 32 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story