5ஜி அலைக்கற்றை ஏலம்; 3-வது நாளாக இன்றும் நடக்கிறது
2-வது நாள் ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் அதிவேக இணையதள இணைப்பு வழங்குவதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, மிட்டலின் பாரதி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன.
இதில் முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு மேற்படி நிறுவனங்கள் ஏலம் கேட்டன. குறிப்பாக, 3300 மெகாஹெட்ர்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுப்பதற்கு கடும் போட்டி நிலவியது.
இதன் தொடர்ச்சியாக நேற்று 2-வது நாள் ஏலம் நடந்தது. இதிலும் 4 நிறுவனங்களும் போட்டி போட்டு ஏலம் எடுத்தன. இதனால் ரூ.1.49 லட்சம் கோடி அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், '5ஜி அலைக்கற்றை ஏலத்தில் நல்ல போட்டி இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து அலைவரிசையிலும் சிறப்பான போட்டி இருக்கிறது. 9-வது சுற்று முடிவில் இதுவரை ரூ.1,49,454 கோடி மதிப்புள்ள ஏலங்கள் பெறப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மற்ற 3 நிறுவனங்களை விட அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோதான் மிகுந்த தீவிரமாக இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்தனர்.