பீகார், மேற்கு வங்காளத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேருக்கு கொரோனா..!!


பீகார், மேற்கு வங்காளத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேருக்கு கொரோனா..!!
x

கோப்புப்படம்

பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கயா,

சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டு இருந்தது.

எனவே இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தாய்லாந்து, மியான்மர்

இந்த நிலையில் பீகாரில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான புத்த கயாவில் இந்த வாரம் நடைபெறும் தலாய்லாமா சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாய்லாந்து மற்றும் மியான்மரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இதில் 33 பேர் கொண்ட குழுவினருக்கு கயாவில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் மியான்மரை சேர்ந்தவர். மீதமுள்ள 4 பேரும் தாய்லாந்து சுற்றுலா பயணிகள் ஆவர்.

ரெயில் நிலையத்திலும் சோதனை

தொற்று பாதித்துள்ள 5 பேரின் உடல்நிலையும் சீராக உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று பி.எப்.7 வகை கொரோனாவா என்பதை உறுதி செய்ய மரபணு சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புத்த கயா ரெயில் நிலையத்திலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து பயணி

இதற்கிடையே இங்கிலாந்தில் இருந்து மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவுக்கு விமானத்தில் நேற்று முன்தினம் இரவு வந்த பெண் பயணி ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையிலும், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதை தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.


Next Story