பெங்களூரு உள்பட 6 இடங்களில் விரைவில் அதிநவீன நகரங்கள்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


பெங்களூரு உள்பட 6 இடங்களில் விரைவில் அதிநவீன நகரங்கள்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட 6 இடங்களில் விரைவில் புதிய அதிநவீன நகரங்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட 6 இடங்களில் விரைவில் புதிய அதிநவீன நகரங்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

எதிர்கால பிரச்சினைகள்

பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் நேற்று தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

நாம் உலக அளவில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். உலகம் பிரச்சினைகளால் மூழ்குகிறது. நிதி ஆதாரங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. இதற்கு நாம் தீர்வு காணாவிட்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். நமது முன்னோர்கள் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தனர். நாம் நமது மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இது நமது கடமை.

நாம் திருடக்கூடாது

எதிா்காலத்தை நாம் திருடக்கூடாது. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாம் பூமியை பாதுகாக்க வேண்டும். டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள இடைவெளியை நாம் குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்க வேண்டும்.

தகவல், உயிரி தொழில்நுட்பத்துறை நமது வளங்களை பாதுகாக்க உதவும். தொழில்நுட்பம் நமக்கு தகவல் களஞ்சியத்தையே ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மிக முக்கியமாக பங்காற்றுகிறது.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள்

வெளிநாடுகளின் தலைவர்கள் பெங்களூரு வரும்போது, இன்போசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிடுகிறார்கள். பெங்களூருவுக்கு விமானம் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் வந்து செல்கிறார்கள்.

பெங்களூருவில் மட்டும் சுமார் 400 ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட 6 இடங்களில் விரைவில் புதிய அதிநவீன நகரங்களை உருவாக்க முடிவு செய்துள்ளோம். மைசூரு, உப்பள்ளி-தார்வார், மங்களூரு, பெங்களூரு, மத்திய கர்நாடக பகுதிகளில் இந்த நகரங்களை உருவாக்க உள்ளோம். பெங்களூருவை பொறுத்தவரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள தேவனஹள்ளி பகுதியில் இந்த நவீன நகரத்தை உருவாக்குகிறோம். இதில் அறிவு, அறிவியல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அதிநவீன வசதிகள்

இதில் அனைத்து வகையான அதிநவீன வசதிகள் இடம் பெறும். அடுத்த 6 மாதங்களுக்குள் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். நமது நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் நகரங்களில் வாழ்வார்கள். அதற்கேற்ப நகரங்களில் வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்நாடகத்தில் புத்தொழில் பூங்கா (ஸ்டார்ட்அப்) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் 2-வது முனையம் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக அழகான முனையமாக மாறியுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story