துமகூருவில் வெவ்வேறு விபத்துகளில் பெங்களூரு வாலிபர்கள் உள்பட 7 பேர் சாவு


துமகூருவில் வெவ்வேறு விபத்துகளில் பெங்களூரு வாலிபர்கள் உள்பட 7 பேர் சாவு
x
தினத்தந்தி 15 Dec 2022 2:36 AM IST (Updated: 15 Dec 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் வெவ்வேறு விபத்துகளில் பெங்களூரு வாலிபர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

துமகூரு,

4 பேர் சாவு

துமகூரு மாவட்டம் குப்பி அருகே கோண்ட்லி கிராஸ் பகுதியில் நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த கேன்டர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் கார் உருக்குலைந்து போனது. இதில் இடிபாடுகளில் சிக்கி காரில் பயணித்த ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து பற்றி அறிந்ததும் குப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா நடுவினஹள்ளி கிராமத்தில் வசித்து வந்த ராமண்ணா (வயது 58), அவரது தம்பி நாராயணப்பா (54), நாராயணப்பாவின் மனைவி நாகரத்னா (46), மகன் சாகர் (23) என்பது தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் காரில் பெங்களூரு நோக்கி சென்றதும், அப்போது கார் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததும் தெரியவந்து உள்ளது. விபத்து குறித்து குப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருமணத்திற்கு சென்று திரும்பிய போது....

இதுபோல பெங்களூருவை சேர்ந்தவர்கள் அனில் (வயது 25), சரண் (28), கிரண் (26), பரத் (25), சிவராஜ் (28). இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் பாகல்கோட்டையில் நடந்த நண்பர் ஒருவரின் திருமணத்தில் அனில் உள்பட 5 பேரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் காரில் 5 பேரும் பெங்களூரு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். துமகூரு மாவட்டம் சிரா தாலுகா கல்லம்பெல்லா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜோகிஹள்ளி பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்பு சுவரில் மோதி சாலையில் பாய்ந்தது.

இந்த விபத்தில் அனில், சரண், கிரண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பரத், சிவராஜ் படுகாயம் அடைந்தனர். விபத்துகள் குறித்து குப்பி, கல்லம்பெல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். துமகூரு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story