75 யூனிட் இலவச மின்சாரம்: பயனாளிகளின் வீட்டிற்கே சென்று தகவல்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு
75 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் வீட்டிற்கே நேரில் சென்று தகவல்களை திரட்டி இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ‘பெஸ்காம்’ நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: 75 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் வீட்டிற்கே நேரில் சென்று தகவல்களை திரட்டி இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு 'பெஸ்காம்' நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு மின்சார வினியோக நிறுவன(பெஸ்காம்) நிர்வாக இயக்குனர் மகாந்தேஷ் பீலகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் நுகர்வோர்
கர்நாடகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ்(பி.பி.எல்.) ரேஷன் அட்டை வைத்துள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மாதம் 75 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. பெங்களூரு மின்சார வினியோக நிறுவன எல்லைக்குள் உள்ள பகுதிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். எங்கள் எல்லை பகுதியில் மொத்தம் 78 ஆயிரம் தலித் மற்றும் பழங்குடியினர் மின் நுகர்வோர் வசிப்பதை கண்டுபிடித்துள்ளோம்.
தகுதியான மக்கள் உடனடியாக மாநில அரசின் சேவா சிந்து இணைய பக்கத்தில் தங்களின் முழு தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு தகவல்களை பதிவேற்றம் செய்யும் தகுதியான மின் நுகர்வோருக்கு 75 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
அதிகாரிகள் குழு
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தகவல்களை கேட்டு பெற்று அதை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணிகளை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குழு அமைத்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு மகாந்தேஷ் பீலகி தெரிவித்துள்ளார்.