75-வது சுதந்திர தின விழா - புதுச்சேரியில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி
புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே 75-வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சேதராப்பட்டு,
நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த 75-வது சுதந்திர தினத்தை நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் விமர்சையாக கொண்டாட வேண்டும் எனவும், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை பறக்க விடவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியில் வீடு தோரும் தேசிய கொடியினை பறக்க விட பாஜகவினர் பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுவை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் செல்வகணபதி ஏற்பாட்டில், சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டி புதுவை கடற்கரை காந்தி சிலையில் இன்று அதிகாலை தொடங்கியது.
மாரத்தான் போட்டி நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய், ஜெ.சரவணன்குமார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்தனர்.
இந்த மாரத்தான் போட்டியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் ஓடினர். மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியர்கள், காவல்துறையினர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.