75-வது சுதந்திர தினம்: டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு - முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி


75-வது சுதந்திர தினம்: டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு - முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
x

சுதந்திரதின விழாவை முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேசியக் கொடி ஏற்றி இன்று பிரதமர் மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்

புதுடெல்லி,

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக மிகுந்த உற்சாத்துடனும், கோலாகலத்துடனும் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. பொது இடங்களில் மூவர்ணக்கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கின்றன. மூவர்ண அலங்காரங்கள், விளக்குகள் கண்களைப் பறிக்கின்றன.

வண்ணமயமான அலங்காரங்களால் ஜொலிக்கிற டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலையில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றுவது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு உரை

அதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடையில் நின்றவாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை ஆற்றுகிறார். அப்போது அவர் நாட்டு மக்களை கவருகிற வகையில், புதிய திட்டங்களை அறிவிப்பார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

2019-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவின்போதுதான் நாட்டின் முப்படைகளுக்கும் தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதே போன்று 2020-ம் ஆண்டில், 6 லட்சம் கிராமங்களை கண்ணாடி இழை கேபிள் நெட்வொர்க்கில் இணைக்கிற பணி 1000 நாட்களில் நடைபெறும் என அறிவித்தார்.

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, ரெயில்வே மற்றும் சாலைவழிகள் உட்பட 16 அமைச்சகங்களை ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்தஉள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான 'கதிசக்தி மாஸ்டர்' திட்டத்தையும், 75 வந்தே பாரத் ரெயில்கள் 75 வாரங்களில் இயக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். எனவே இந்த ஆண்டும் இப்படிப்பட்ட திட்ட அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், சுப்ரீம் கோர்ட்டு-ஐகோர்ட்டு நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அ னுப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு

டெல்லியில் இன்று சுதந்திரதின விழாவையொட்டி விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடந்திடாத வகையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி செங்கோட்டையைச்சுற்றிலும் 10 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டு இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டிரோன் தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி செங்கோட்டையில் உள்ள ஒவ்வொரு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் முக அடையாளம் காணும் அமைப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உயர்வு தெளிவுத்திறன் கொண்ட சுமார் 1,000 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முக்கிய இடங்களில் தீவிர ரோந்துப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

டெல்லி செங்கோட்டை சுற்று வட்டாரத்தில் 5 கி.மீ. பரப்பளவில் பட்டங்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கைகள்

ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வாகன சோதனைகளும் நடந்து வருகின்றன. மெட்ரோ ரெயில் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கிய சந்தைகள் என மக்கள் பெருமளவில் கூடுகிற இடங்களில் கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடந்து வருகிறது.

இன்று காலை 4 மணி முதல் 10 மணி வரையில் நேதாஜி மார்க், லோதியன் சாலை, எஸ்.பி.முகர்ஜி மார்க், சாந்தினி சவுக், நிஷாத் ராஜ் மார்க், எஸ்பிளனேடு சாலை, ராஜ்காட் ரிங் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு உள்ளிட்ட சாலைகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

நேற்றிரவு 10 மணி முதல் நொய்டா எல்லை, லோனி எல்லை, சிங்கு பார்டர், காஜிப்பூர் எல்லை, பதர்பூர் பார்டர், சாபியா பார்டர், மகாராஜ்பூர் பார்டர், திக்ரி பார்டர் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணி வரை இது தொடரும்.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இன்றைய சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைகட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Next Story