மிசோரம் மாநிலத்தில் கல்குவாரியில் நிலச்சரிவு; 8 பேர் பலி மேலும் 4 பேர் கதி என்ன?


மிசோரம் மாநிலத்தில் கல்குவாரியில் நிலச்சரிவு; 8 பேர் பலி  மேலும் 4 பேர் கதி என்ன?
x
தினத்தந்தி 16 Nov 2022 5:00 AM IST (Updated: 16 Nov 2022 5:01 AM IST)
t-max-icont-min-icon

மிசோரம் மாநிலம் நாதியால் மாவட்டம் மவுடார் கிராமத்தில் ஒரு கல்குவாரி உள்ளது.

அய்ஸ்வால்

மிசோரம் மாநிலம் நாதியால் மாவட்டம் மவுடார் கிராமத்தில் ஒரு கல்குவாரி உள்ளது. நேற்று முன்தினம், கல்குவாரியில் ஒப்பந்த பணியாளர்கள் ஆழமாக குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.

நிலத்தை தோண்ட பயன்படும் எந்திரங்கள், துளையிடும் எந்திரங்கள், கல் அரைக்கும் எந்திரங்கள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.

அந்த அதிர்வை தாங்க முடியாமல், நிலச்சரிவு ஏற்பட்டது. குவாரியின் மேலே இருந்த மண் மற்றும் பாறைகள் பள்ளத்துக்குள் விழுந்தன. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

ஒருவர் மட்டும் வெளியேறி உயிர் தப்பினார். மீதி 12 பேரை மண் மூடியது. எந்திரங்களும் மண்ணுக்குள் புதைந்தன.

தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி, 8 பேரை பிணமாக மீட்டனர். இன்னும் 4 பேரை தேடி வருகிறார்கள். அவர்கள் மீட்கப்படும் வரை மீட்பு பணி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு பகுதி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றின் வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story