வங்கி ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் திருட்டு


வங்கி ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:50+05:30)

உப்பள்ளியில் வங்கி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

உப்பள்ளி-

ரூ.8 லட்சம் நகைகள் திருட்டு

தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த அசோக்நகர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பவானிநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வங்கி ஊழியராக ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவனை இழந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவும் உடைந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான 168 கிராம் தங்கம், 1 கிலோ 200 கிராம் வெள்ளி, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாத போது திருடர்கள் வந்து திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து அசோக்நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு குறித்து ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.


Next Story