நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 9 பேர் கைது
மங்களூருவில் நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் ரெயிலில் வந்து கைவரிசை காட்ட முயன்றது அம்பலமாகி உள்ளது.
மங்களூரு:-
கொள்ளையடிக்க திட்டம்
மங்களூரு உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட தொக்கொட்டு பகுதியில் உள்ள நகைக்கடையில் சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டு வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் மஞ்சிலா பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார், மஞ்சிலா பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் 9 பேர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு தங்கி இருந்தது தெரியவந்தது.
9 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த தினேஷ் ராவல் என்கிற சாகர் (வயது 38), குஜராத் காந்திவாடியை சேர்ந்த பாஸ்கர பெல்சபடா (65), பிஸ்தா ரூப் சிங் (34), கிருஷ்ணா பகதூர் (41), ஜார்கண்டை சேர்ந்த முகமது ஜமில் (29), இன்மாம் உல் ஹக் (27), இமாதுல் ரசாக் (32), பிவுல் ஷேக் (31), இம்ரான் ஷேக் (30) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 9 பேரும் பிரபல 'சாஹிப் கஞ்ச்' கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், தொக்கொட்டில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ரெயிலில் வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 ஸ்கூட்டர்கள், கியாஸ் கட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கியாஸ் சிலிண்டர், கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணை
மேலும் அவர்கள் கோனஜே போலீஸ் எல்லைக்குட்பட்ட நாடேகல், உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட அம்பிகா சாலை, உச்சிலா ஆகிய பகுதிகளில் 3 ஸ்கூட்டர்களை திருடியதும் தெரியவந்தது. அவர்கள் மீது பல மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.