தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு


தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
x

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மைசூரு:

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், ஜூன் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. ஆனால் கடந்த மாதம் (ஜூலை) தொடக்கத்தில் இருந்து 10 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

அதன்பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத்திருந்த கனமழை தற்போது மீண்டும் பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக மாநிலத்தில் பெங்களூரு, குடகு, தட்சிண கன்னடா மற்றும் வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கே.ஆர்.எஸ்., கபினி

குடகில் பெய்து வரும் தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவை எட்டிவிட்டதால் அதிகளவு உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 124.76 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 81 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,283.46 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13,012 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

96 ஆயிரம் கனஅடி தண்ணீர்

இரு அணைகளில் இருந்தும் திறக்கப்படும் தண்ணீர் திருமகூடலு பகுதியில் ஒன்றிணைந்து அகண்ட காவிரியாக தமிழகத்துக்கு செல்கிறது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு செல்கிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள கணபதி, சந்திரமவுஸே்வரர், நிமிஷாம்பா கோவில்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ரங்கணதிட்டு பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கட்டியிருந்த கூடுகள், குஞ்சுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கால் ரங்கணதிட்டு பறவைகள் சரணாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story