பெங்களூருவில் தொடர் கனமழைக்கு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: கடையில் இருந்த பொருட்கள் நாசம்


பெங்களூருவில் தொடர் கனமழைக்கு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: கடையில் இருந்த பொருட்கள் நாசம்
x

பெங்களூருவில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது. கடையில் இருந்த பொருட்கள் நாசமடைந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது. கடையில் இருந்த பொருட்கள் நாசமடைந்துள்ளது.

3 மாடி கட்டிடம் இடிந்தது

பெங்களூரு சிட்டி மார்க்கெட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்பேட்டை அருகே அவென்யூ ரோடு, பெல்லி பசவா கோவில் அருகே 3 மாடி கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானதாகும். கட்டிடத்தின் தரை தளத்தில் பண்டாரி என்பவர் பிளாஸ்டிக் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கட்டிடத்தின் மற்ற தளங்கள் காலியாக இருந்தது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் பண்டாரி தனது கடையை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதன்காரணமாக கடையில் இருந்த பொருட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி நாசமானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிட்டி மார்க்கெட் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரா்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரித்தனர்.

தொடர் மழையின் காரணமாக...

அப்போது அந்த 3 மாடி கட்டிடம் மிகவும் பழமையானது என்று தெரிந்தது. இதன் காரணமாக தரைதளத்தில் மட்டும் கடை இருந்துள்ளது. மற்ற தளங்கள் காலியாக இருந்துள்ளன. பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கட்டிடத்தின் சுவர்கள் வலுவிழந்திருப்பதுடன், பழமையான கட்டிடம் என்பதால் இடிந்து விழுந்து தரைமட்டமானது தெரியவந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததாலும், அந்த சந்தர்ப்பத்தில் கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் இல்லாத காரணத்தாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story