தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் சாவு
பத்ராவதி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சிவமொக்கா:-
4 வயது சிறுவன்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தோனபகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சையது நசருல்லா. விவசாயி. இவரது மகன் சையது மதானி (வயது 4). இந்த நிலையில் நேற்று முன்தினம் சையது நசருல்லா, தனது வயலில் நெல் பயிரை அறுவடை செய்வதற்காக டிராக்டரில் சென்றார். அப்போது, தானும் வருவதாக சையது மதானி அவரது பின்னால் சென்றுள்ளான். இதனை கவனிக்காமல் சையது நசருல்லா அங்கிருந்து டிராக்டரில் சென்றுவிட்டார். ஆனால் சையது மதானி, டிராக்டர் பின்னால் ஓடினான். இந்த நிலையில் தெரு முனையில் 4 நாய்கள் சண்டையிட்டு கொண்டிருந்தன.
தெருநாய்கள் கடித்து சாவு
அப்போது அந்த தெருநாய்கள் திடீரென்று சிறுவன் சையது மதானியை சூழ்ந்து கொண்டு பாய்ந்து அவனை கடித்து குதறின. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் அலறி துடித்தான். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள், தெருநாய்களை விரட்டியடித்து சையது மதானியை மீட்டனர்.
பின்னர் பலத்த காயம் அடைந்த சையது மதானியை, அவர்கள் பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுவன் சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சையது மதானி பரிதாபமாக உயிரிழந்தான்.
போலீஸ் விசாரணை
சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.