அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 4 வயது சிறுவன் சாவு
பெங்களூருவில், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 4 வயது சிறுவன் உயிரிழந்தான். இதற்கு பயிற்சி டாக்டரின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
பெங்களூரு:-
சிறுவன் சாவு
பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் டேவிட். இவரது மகன் டார்வின்(வயது 4). டார்வினுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. டார்வினின் முதுகுதண்டு பகுதியில் ஒரு கட்டி இருந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டார்வினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் டார்வினை அவனது பெற்றோர், இந்திரா காந்தி குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் பயிற்சி டாக்டர் ஒருவர் டார்வினுக்கு சிகிச்சை அளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் டார்வினின் உடல்நிலை சீராகவில்லை. மாறாக அவனது உடல்நிலை மோசமாகி உள்ளது. சிறிது நேரத்தில் டார்வின் உயிரிழந்து விட்டதாக பயிற்சி டாக்டர் கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் டார்வினின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
டாக்டரின் அலட்சியம் காரணம்
பின்னர் அவனது உடலை ஆஸ்பத்திரி முன்பு வைத்து பெற்றோரும், உறவினர்களும் போராட்டம் நடத்தினர். அப்போது எங்களது அனுமதி இல்லாமல் டார்வினின் முதுகுதண்டில் இருந்த கட்டியை டாக்டர் அகற்றி உள்ளார். இதனால் டார்வின் இறந்து விட்டான். டாக்டரின் அலட்சியம் காரணமாக தான் டார்வின் இறந்து விட்டான் என்று குற்றச்சாட்டு கூறினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு உண்டானது.
ஆனால் இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. துமகூருவில் டாக்டரின் அலட்சியத்தால் கர்ப்பிணி, 2 சிசுக்கள் உயிரிழந்த சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள், டாக்டரின் அலட்சியத்தால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.