மழை-வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு கர்நாடகம் வந்தது-4 குழுவாக பிரிந்து நேரில் ஆய்வு செய்கிறார்கள்


மழை-வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு கர்நாடகம் வந்தது-4 குழுவாக பிரிந்து நேரில் ஆய்வு செய்கிறார்கள்
x

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை மத்திய குழு பார்வையிட தொடங்கியுள்ளது. அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று ஆய்வு செய்கிறார்கள்.

பெங்களூரு: கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை மத்திய குழு பார்வையிட தொடங்கியுள்ளது. அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று ஆய்வு செய்கிறார்கள்.

மத்திய குழு வருகை

கர்நாடகத்தில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி மற்றும் சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட உள்துறை இணை செயலாளர் ஆசிஷ் தலைமையில் மத்திய குழு நேற்று கர்நாடகம் வந்தது. அந்த குழுவினருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விவரித்தார்.

4 குழுக்களாக ஆய்வு

அதன் பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதம் மற்றும் இம்மாதத்தில் இதுவரை பெய்துள்ள மழை, அதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மத்திய குழுவுக்கு தெரிவித்தேன்.

விவசாய பயிர்கள் சேதம் குறித்தும் தகவல்களை கூறியுள்ளோம். உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் விவரங்களையும் கூறியுள்ளோம். மத்திய குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து சென்று ஆய்வு நடத்த இருக்கிறார்கள்.

சிறப்பு நிவாரண உதவி

அவர்கள் தங்களின் ஆய்வை முடித்து கொண்டு டெல்லிக்கு திரும்பும் முன்பு மீண்டும் ஒரு முறை அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். பெங்களூரு நகர மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், ஏரிகள் நிரம்பி வழிந்து ஏற்பட்டுள்ள சிக்கல்கள், இழப்பு குறித்த விவரங்களையும் வழங்கியுள்ளேன். சில இடங்களில் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு விதிமுறைகளின்படி நிவாரணம் வழங்க முடியாது. விதிகளை திருத்தி அவர்களுக்கும் உதவி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினேன்.

நிலச்சரிவுக்கு சிறப்பு நிவாரண உதவியை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கூறி இருக்கிறேன். பொதுவாக வெள்ளம் ஏற்படும்போது 2, 3 நாட்களில் வெள்ளம் வடியும். ஆனால் தற்போது பெய்யும் மழையால் தினமும் வெள்ளம் ஏற்படுகிறது. பெங்களூரு மகாதேவபுராவில் ஆய்வு செய்ய ஒரு குழு செல்கிறது. அந்த குழு அந்த பணியை முடித்து கொண்டு ராமநகர், மண்டியா, குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வாருக்கு செல்கிறது.

பெரிய அளவில் சேதம்

மற்றொரு குழு சித்ரதுர்காவுக்கும், சிக்கமகளூருவுக்கு ஒரு குழுவும், இன்னொரு குழு பீதர், கலபுரகிக்கும் செல்கிறது. இந்த முறை கர்நாடகத்தில் வெள்ளத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதால் சிறப்பு நிதி உதவி வழங்க பரிந்துரை செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story