மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்; 5 வயது மகனுடன் தம்பதி பலி


மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்;  5 வயது மகனுடன் தம்பதி பலி
x

தங்களது 3 வயது மகன் ஹனியுடன் வீரேஷ் - அஞ்சலி தம்பதி.

பல்லாரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய கோர விபத்தில் 5 வயது மகனுடன் தம்பதி பலியானார்கள்.

பல்லாரி: பல்லாரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய கோர விபத்தில் 5 வயது மகனுடன் தம்பதி பலியானார்கள்.

மொரார்ஜி தேசாய் பள்ளி

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஹொசயர்ரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரேஷ்(வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அஞ்சலி(29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தினேஷ்(5). 2-வது மகன் ஹனி(3).

அஞ்சலி பி.எட். படித்து வந்தார். அவருக்கு தற்போது தேர்வு நடைபெற உள்ளது. இதனால் மனைவி மற்றும் மகன்களை பல்லாரி டவுனில் உள்ள அஞ்சலியின் வீட்டுக்கு வீரேஷ் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

லாரி மோதியது

இதற்காக அவர் இன்று காலையில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் பல்லாரி நோக்கி புறப்பட்டார். இவர்கள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் பல்லாரி அருகே கவுல் பஜார் மேம்பால சாலையில் சென்று கொண்டிருந்தனர். வீரேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்ட அஞ்சலி தனது மகன்களுடன் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் மேம்பால சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

3 பேரும் பலி

இதில் தூக்கி வீசப்பட்ட வீரேஷ், அவரது மனைவி அஞ்சலி, மகன் தினேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 3 வயது மகன் ஹனி படுகாயத்துடன் பல்லாரி மிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இச்சம்பவம் குறித்து பல்லாரி டவுன் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து அறிந்த வீரேஷ் மற்றும் அஞ்சலியின் குடும்பத்தினர் மிம்ஸ் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story