குடும்ப பிரச்சினையில் பயங்கரம்: 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்ற கொடூர தாய்
கலபுரகி அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலபுரகி: கலபுரகி அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப தகராறு
கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா கோபானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா பூஜாரி. இவரது மனைவி அனிதா. இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. பசப்பா பூஜாரியும், அனிதாவும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு மோனிகா (வயது 6) என்ற மகளும், 4 வயதில் சித்தலிங்கா என்ற மகனும் இருந்தார்கள். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதுபோல், நேற்றும் பசப்பா மற்றும் அனிதா இடையே வாக்குவாதம் உண்டானது.உடனே பசப்பா வெளியே புறப்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில், தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு அனிதா வெளியே சென்றார்.
2 குழந்தைகள் கொலை
பின்னர் கிராமத்தில் உள்ள குட்டையில் தனது குழந்தைகளான மோனிகா மற்றும் சித்தலிங்காவை அனிதா வீசியதாக கூறப்படுகிறது. இதில் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பலியானாா்கள். உடனே அங்கிருந்து அனிதா தப்பி ஓட முயன்றார். அப்போது அங்கு வந்த கிராம மக்கள், அனிதாவை மடக்கி பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் முதோல் போலீசாா் விரைந்து வந்து தீயணைப்பு படையினர் உதவியுடன் சேர்ந்து 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனிதாவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளையும் அனிதா கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.