ஊழலில் புதிய சாதனை; ஆம் ஆத்மி மீது அனுராக் தாகுர் அரசியல் ரீதியாக தாக்குதல்
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு ஊழலில் புதிய சாதனை படைத்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாகுர் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது மத்திய அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கை 2021-22ல் விதிகள் மீறப்பட்டுள்ளன என கூறி அதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கவர்னர் சக்சேனா பரிந்துரைத்து உள்ளார்.
இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த அதிஷி மர்லேனா கூறும்போது, கடந்த காலங்களில் கட்சியின் எந்தவொரு தலைவர் மீதும் ஒற்றை ஊழல் குற்றச்சாட்டை கூட மத்திய அமைப்புகளால் நிரூபிக்க முடியவில்லை.
எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் மந்திரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவது புதிதல்ல. அனைத்து மத்திய அமைப்புகளையும் எங்களுக்கு எதிராக பயன்படுத்தியபோதும், அவர்களால் ஓர் ஊழல் குற்றச்சாட்டை கூட எங்களுக்கு எதிராக நிரூபிக்க முடியவில்லை.
இந்த விவகாரமும் (கலால் கொள்கை) சி.பி.ஐ.யால் விசாரிக்கப்படட்டும். கெஜ்ரிவாலை எப்படி தடுத்து நிறுத்தியுள்ளனர் என்றும், கட்சி தலைவர்களுக்கு எதிராக பொய்யான வழக்குகள் போடப்படுவது ஆகியவற்றை பற்றியும் உலகமே பார்க்கிறது என கூறியுள்ளார்.
கடந்த மே மாதத்தில், டெல்லி மின்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினை ரூ.4.8 கோடி பணமோசடி வழக்கில் அமலாக்க துறை கைது செய்திருந்தது. எனினும், உலகிற்கு மொகல்லா கிளினிக்குகளை தந்த மந்திரி ஜெயின் என புகழ்ந்த கெஜ்ரிவால் அவரை பாதுகாக்கும் வகையிலும் பேசினார். கைது பின்னணி பற்றியும் கேள்வி எழுப்பினார். திட்டங்கள் தொடரும் என்றும் உறுதி கூறினார்.
இந்த நிலையில், மதுபான உரிமங்களுக்கு அளவுக்கு மீறிய பலன்களை, அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வழங்கியுள்ளார் என்றும் பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது. எனினும், சிசோடியாவை நேர்மையானவர் என கூறி கெஜ்ரிவால் வெளிப்படையான ஆதரவை வழங்கியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் வளர்வது பொறுக்க முடியாமல் பா.ஜ.க.வானது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு ஊழலில் புதிய சாதனை படைத்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாகுர் கூறி உள்ளார். இதனால், கெஜ்ரிவால் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான அரசியல் போர் நீடித்து வருகிறது.