தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியது


தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியது
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

சிவமொக்காவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவமொக்கா:

தொடர் அட்டகாசம்

சிவமொக்கா தாலுகா ஹரமகட்டா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி சிறுத்தை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. கடந்த 15 நாட்களில் 3 மாடுகளை அந்த சிறுத்தை வேட்டையாடி கொன்றுள்ளது.

இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்தனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வனத்துறையினர் அந்த கிராமத்தையொட்டி உள்ள தோட்டத்தில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர்.

சிறுத்தை சிக்கியது

இந்த நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் வசமாக சிக்கிக் கொண்டது. இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

பிடிபட்டது ஆண் சிறுத்தை என்றும், அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆக்‌ரோஷமாக சீறியது

முன்னதாக சிறுத்தை பிடிபட்டது குறித்து அறிந்ததும் அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கூண்டு இருந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது சிலர், கூண்டில் சிக்கிய சிறுத்தையை கம்பு குச்சியால் சீண்டினர். அவர்களை பார்த்து சிறுத்தை ஆக்ரோஷமாக உறுமியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

மேலும், சிறுத்தையை சீண்டியவர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story