புதிய ஜனாதிபதி முர்முவின் சொந்த மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து


புதிய ஜனாதிபதி முர்முவின் சொந்த மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து
x

புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.

புவனேஸ்வர்,

புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்கும் விழாவில் பங்கேற்க அவரது சொந்த மாவட்டமான ஒடிசா மயூர்பஞ்சை சேர்ந்த 60 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும், தங்கள் மண்ணின் மகள் நாட்டின் முதல் குடிமகளாக பதவியேற்பதை கண்குளிரப் பார்த்தவுடன், வீட்டுக்கு கிளம்புவோம் என்றுதான் நினைத்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு இனிய அதிர்ச்சியாக, 'ஜனாதிபதி தன்னுடன் ஜனாதிபதி மாளிகையில் விருந்து அருந்த உங்களை அழைத்திருக்கிறார்' என்றனர் அதிகாரிகள். அவர்கள் அனைவருக்கும் விருந்துடன், ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதியின் அலுவலகத்தையும் பொறுமையாக சுற்றிக் காண்பித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

'ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதிலேயே எங்களுக்கு பெருமகிழ்ச்சி. விருந்துக்கு எல்லாம் அழைக்கப்படுவோம் என நினைக்கவே இல்லை' என்று இன்னும் மாறாத திகைப்புடன் கூறுகிறார், மயூர்பஞ்ச் ஜில்லா பரிஷத் முன்னாள் தலைவரான சுஜாதா முர்மு.

அதேபோன்ற நெகிழ்வை வெளிப்படுத்துகிறார்கள், ஜனாதிபதி முர்முவுக்கு நீண்டகாலமாக நெருக்கமானவர்களான காயாமணி பேஷ்ராவும், டாங்கி முர்முவும். விருந்து முடிந்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி முர்முவின் சொந்த மாவட்டக்காரர்களுக்கு தலா ஒரு பாக்கெட் சுவீட்டும் கொடுத்து வழியனுப்பிவைத்திருக்கிறார்கள்.

மேலும், ஜனாதிபதி முர்மு சுத்த சைவம், பூண்டு, வெங்காயம்கூட சாப்பிட மாட்டார் என்பதால் விருந்தும் சைவமாகவே இருந்தது. வெஜிடபிள் சூப், பாலக் பனீர், சீரக புலாவ், மலாய் கோப்தா, நான், ரசமலாய், பச்சைக் காய்கறி சாலட், பழங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன என்று கூறினர்.


Next Story